மேற்கு வங்கம் அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாக கருத்தப்பட்ட பாஜகவை சேர்ந்த தொழிலாளரின் மரணம் தற்கொலை என தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று புருலியா மாவட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் தூக்கில் தொங்கியபடி பாஜகவை சேர்ந்த துளல் குமார் என்பவர் கண்டெடுக்கப்பட்டார். துளல் குமார் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மின்கம்பத்தில் தொங்கியபடி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துளல் குமாரை திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சிலர் கொலை செய்து விட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் முயற்சித்தனர். இந்நிலையில் பரிசோதனையின் அறிக்கையில் அவர் மூச்சித்திணறி இறந்துள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. துளல் மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறை அதிகாரி அகாஷ் மகாரியா இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்பாக துளல் குமாருக்கு அடையாளம் தெரியாத சிலரால் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக அவரது சகோதரர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது