சண்டிகர்

இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதையொட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானதால் ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  விசாரணையில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளைச் செல்லாத வாக்குகளாக அறிவித்ததைத் தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டு பாஜல வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டு ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.  இன்று சண்டிகர் மாநகராட்சியில் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறுதேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் குல்ஜீத் சிங் சந்துவும், காங்கிரஸ் சார்பில் குர்பிரீத் காபியும் மூத்த துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டனர். பா.ஜ.க. சார்பில் ராஜிந்தர் சர்மாவும், காங்கிரஸ் சார்பில் நிர்மலா தேவியும் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

ஏற்கனவே பா.ஜ.க.வில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். கடந்த 19ம் தேதி 3 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளன. சிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு உறுப்பினர் இடம் உள்ளது.

35 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதைப் போல், பாஜக வேட்பாளர் ராஜிந்தர் சர்மாவும் அதே வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மூத்த துணை மேயர் பதவிக்கான தேர்தலில், ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.