ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்சூர் அகமது (வயது 59). இவர் கடந்த 1971ம் ஆண்டு முதல் முசோரி பகுதியில் ஆடையகம் நடத்தி வருகிறார். அங்குள்ள பழமையான 5 வியாபாரிகளில் இவரும் ஒருவர்.
இவரது பேஸ்புக் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை பாராட்டும் வகையிலான வீடியோ இடம்பெற்றிருந்தாக கூறி பாஜ இளைஞரணி மற்றும் ஹிந்து ஜக்ரன் மஞ்ச் அமைப்பினரும் கடைக்கு வந்து மன்சூர் அகமதுவிடம் தகராறு செய்து கடையை பூட்டினர்.
‘‘கடையை பூட்டிவிட்டு முசோரி வர்த்தகர் சங்க நிர்வாகிகளும், நாங்களும் இணைந்து மன்சூர் அகமது மீது போலீசில் புகார் செய்யவுள்ளோம்’’ என்று பாஜ இளைஞரணி தலைவர் தரம்பால் சிங் தெரிவித்தார்.
அதே சமயம் தனது பேஸ்புக் பக்கத்தில் யாரோ ஊடுறுவி பதிவுகளை போட்டிருப்பதாக அகமதுவும் முசோரி போலீஸில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் ராவுத்தன் கூறுகையில்,‘‘பேஸ்புக்கில் இடம் பெற்ற தேச விரோத பதிவு தற்போது அவரது பக்கத்தில் இல்லை.
அகமதுவின் செல்போன் நம்பர் சைபர் கிரைம் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பேஸ் புக் ஊடுறுவப்பட்டதா என்பதை அறிய சோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.
முசோரியில் கடந்த மாதம் 18ம் தேதி சாம்பியன் கிரிக்கெட் கோப்பையை பாகிஸ்தான் பெற்றபோது மூன்று முஸ்லிம் சிறுவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டுக் கொண்டே ஓடினார்கள். இவர்கள் மூன்று பேரும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆனால் பாஜக.வினரும், சில வர்த்தகர்களும் இது காஷ்மீரி வர்த்தகர்கள் மற்றும் இதர முஸ்லிம்களின் செயல் என குற்றம்சாட்டினர்.
மேலும், காஷ்மீரி வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கும் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று முசூறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 5 வியாபாரிகள் மட்டும் இங்கே கடை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மன்சூர் அகமதுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.