சேலம் :
பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை. தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றிபெறச்செய்ய மக்கள் தயாராக உள்ளனர்” என குறிப்பிட்டார்.
“234 தொகுதிகளிலும் கட்சியை வலிமை படுத்தும் பணிகளில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்த சி.டி.ரவி, “கோவா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது போல், வட-கிழக்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடுகிறாரே தவிர மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை” என பா.ஜ.க., பொறுப்பாளர் சி.டி. ரவி குற்றம் சாட்டினார்.
– பா. பாரதி