பெங்களூரு:
கர்நாடகாவில் டிசம்பர் 5-ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 15 பேரும் பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்று வந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, கடந்த ஜூலை மாதம் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது.
இதைத்தொடர்ந்து கட்சி கொறடாக்களின் உத்தரவின்பேரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உள்பட 15 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் தேதி மாற்றிய தேர்தல் ஆணையம் டிசம்பர் 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரும் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் தாவங்கரேவில் லிங்காயத் சமுதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடியூரப்பா, மற்ற சமூகங்களிடமிருந்தும் சமூக-மேம்பாட்டு பணிகளுக்கான நிதிகளுக்கான கோரிக்கைகளை நான் பெற்று வருவதால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது கடினம் என்றவர், அரசாங்கத்தை நடத்துவது இறுக்கமான கயிற்றில் நடப்பது போன்றது, ”என்று கூறினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, பாஜக அரசு அமைக்க தங்களது பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் போட்டியிட கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் அனுமதி அளித்துள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.