மும்பை

பாஜக இம்முறை நிச்சயம் ராமர் கோவில் அமைக்கும் என சிவசேனா கட்சி உறுதி அளித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவின் கூட்டணியில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இடம் பெற்றுள்ளது. சென்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு இடையில் இரு கட்சிகளுக்கு இடையில் கடும் அதிருப்தி நிலவியதால் இம்முறை கூட்டணி அமையாது என பலரும் எண்ணி இருந்தனர், ஆனால் இரு கட்சிகளும் தேர்தலில் கூட்டணி அமைத்தன.

பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா நாளிதழ் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தலையங்கத்துக்கு ”ராமரின் பணி நிறைவேறும்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலையங்கத்தில் நாளை நடைபெற உள்ள மோடியின் பதவி ஏற்பு விழாவை ராமரின் பட்டாபிஷேகத்துடன் ஒப்புடப்பட்டுள்ளது.

அந்த தலையங்கத்தில், “ராமர் கோவில் அமைக்கும் எண்ணம் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டில் ராமராஜ்யம் அமைய வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். ராமரின் ஆசியுடன் இனி நல்லதே நடக்கும். இந்த நாட்டின் பெருமைக்குறியவர் ராமர் ஆவார். ராமர் கோவில் அமைக்க ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் ரத்தம் சிந்தி உள்ளனர். அவர்கள் தியாகமும் சிந்திய ரத்தமும் வீண் போகாது. அரசு நிச்சயம் ராமர் கோவிலை அமைக்கும்.

மோடியின் ஆட்சி என்பது ராம ராஜ்யம் என்பதில் ஐயமில்லை. எந்த ஒரு விவசாயியையும் யாரும் தற்கொலை செய்துக் கொள்ள தூண்டவில்லை. அனைவருக்கும் இரு வேளை உணவு தடையின்றி கிடைக்கிறது. கடன் தொல்லை இன்றி பொதுமக்கள் பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். சாதி மத வேறுபாடுகள் உடைக்கப்பட்டுள்ளன. அகண்ட பாரதம் என்னும் கனவு விரைவில் மெய்யாகி ராமரின் புகழை நாடே கொண்டாட உள்ளது

ராமரின் ஆசியால் மோடியை எதிர்த்த ராவணன், விபீஷணன், கம்ச மாமன் மற்றும் அவர்களின் கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இத்தனை கோடிக்கணக்கான மக்களின் ராமர் கோவில் விருப்பத்தை உச்சநீதிமன்றம் புறக்கணிக்காது. ராமரின் வெற்றி ரத யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது. ராமரை எதிர்த்த மம்தா பானர்ஜி போன்றோர் அவர்கள் மாநிலத்திலேயே தோல்வியை தழுவி உள்ளனர். ராமரை முன் நிறுத்திய அமித்ஷா போன்றோர் வென்றுள்ளனர்” என குறிப்பிடப் பட்டுள்ளது.