திருச்சி
பாஜக இந்தியாவிலிருந்து முழுமையாக அகற்றப்படும் எனக் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி மணி கூறி உள்ளார்.

நேற்று உத்தரப்பிரதேசத்தில் கார் மோதியும் வன்முறையிலும் 8 விவசாயிகள் உயிர் இழந்தனர். இதையொட்டி மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து காங்கிரசார் தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார். தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம், ”கடந்த ஒரு வருடமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் அமைதி வழியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய உள்துறை இணையமைச்சர் மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
இதையொட்டி விவசாயிகளுக்கு ஆதரவாகக் களத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தியை காவல்துறை கைது செய்தனர். ஆயினும் விபத்துக்குக் காரணமான மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை. இத்தகைய கைது நடவடிக்கைகளுக்குப் பிரியங்கா காந்தியோ அல்லது காங்கிரசாரோ பயப்படமாட்டார்கள்.
மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி விலக வேண்டும். உடனடியாக அவரது மகனைக் கைது செய்ய வேண்டும். மேலும் பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும். வரும் தேர்தலில் விவசாய விரோத பாஜக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உ பி மட்டுமின்றி நாட்டில் இருந்தே பாஜக முழுமையாக அகற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]