சென்னை: மோடியுடன் எம்ஜிஆர் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி தமிழ்நாடு பாஜக உருவாக்கியுள்ள வேல் யாத்திரை பிரசார வீடியோ அதிமுக தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இநத வீடியோவை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
எம்ஜிஆருக்கு, தமிழக மக்களிடையே குறிப்பாக கிராமப்புற மக்களிடையே இன்றளவும் மங்காத ஆதரவு உள்ளது. அந்த ஆதரவை, தங்களது கட்சிக்கு மாற்றும் நோக்கில், தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி, இந்த வெற்றிவேல் யாத்திரை வீடியோவை உருவாக்கி உள்ளது.
அந்த வீடியோவில், தமிழகத்தின் கிராமப்புற தெய்வனமான கருப்பசாமியை முன்னிலைப்படுத்தி, வெள்ளைக்குதிரையில் கருப்பசாமி வாராறு என்ற பாடலுடன் மோடி, நட்டா உள்பட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தோன்றுவது போல காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, எம்ஜிஆர் நடித்த விவசாயி படம், தமிழக மக்களிடையே பெரும் வெற்றி பெற்றதை நினைவுகொண்டு, அந்தபடத்தில் எம்ஜிஆர் ஏர்கலப்பையுடன் உள்ள வீடியோ காட்சிகளை உல்டா செய்து, மாநில பாஜக தலைவர் முருகன் ஏர்கலப்பபையுடன் வயல்வெளியில் இறங்கி நடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள அதிமுகவினரின் வாக்குகளை தங்களது கட்சிக்கு இழுக்கும் நோக்கில், பாஜக திட்டமிட்டு இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது. மாற்றுக்கட்சியின் தலைவரை, அரசியல் லாபத்துக்காக பாஜக உபயோகப்படுத்தி இருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பாஜக 2021 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, தொடங்க இருந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழகஅரசு தடை விதித்தது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், தடையை மீறி பாஜக யாத்திரையை நடத்துவதும், அவர்களை கைதுசெய்து விடுவிப்பதும் நாடகமாக நடைபெற்றது. 4 முறை பாஜக தலைவர் முருகன் தடையை மீறி யாத்திரை சென்றதும், அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்ததும் தமிழக அரசியல் கட்சிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தின. தமிழ்நாடு அரசு, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பயந்து, எல்.முருகன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்தே தமிழகத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு முழமையாக தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அதிமுக மூத்த தலைவரான சி பொன்னையான் கூறும்போது, “வேல் யாத்திரையைப் பொருத்தவரை, நாங்கள் மத்தியஅரசைப் பற்றி சற்று பயப்படுவதில்லை. எங்கள் சித்தாந்தங்கள் வேறுபட்டவை … இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம் மற்றும் அனைத்தையும் நாங்கள் விரும்புகிறோம். வகுப்புவாத நல்லிணக்கத்தை நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
அதே வேளையில், வேல்யாத்திரையை தமிழகஅரசு தடை செய்தது தவறு என்று கூறும் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், முதல்வர் , திருப்பதிக்குச் சென்றபோது நூற்றுக்கணக்கான அதிமுக தொழிலாளர்கள் வேலூரில் அவருடன் இருந்தனர். அவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்களா, காவல்துறை முதலில் முதல்வர் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.