திருவண்ணாமலை
விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது.
தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காகக் கையகப்படுத்த முடிவு செய்தது.
கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இதனை எதிர்த்து விவசாயிகள் போராடிவந்தனர். இவர்களில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை போராட்டம் அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில்,
“திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயன்ற திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்”,
என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.