பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர்.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் பீகாரின் பல பகுதிகளில் பாஜகவின் ஆடிப்பாடி வெற்றிக் கொண்டாட்டங்களில் களம் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக கிழக்கு சம்பாரனில் உள்ள ஜாமுவா என்ற கிராமத்தில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜாமுவா பகுதிக்குட்பட்ட தொகுதியில் பாஜகவின் பவன்குமார் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றுள்ளார். இதை கொண்டாடிய அக்கட்சியினர், வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதன் படி ஊர்வலம் சென்ற பாஜகவினர் அங்கே உள்ள மசூதி ஒன்றை சூறையாடினர். அப்போது உள்ளே தொழுகையில் இருந்த 5 பேருக் காயம் ஏற்பட்டது.

ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமிட்டபடி மசூதியை சூறையாடிய அவர்கள், இரண்டு வாயில்களையும் அடித்து நொறுக்கினர். மசூதியின் ஒலிபெருக்கியும் தாக்குதலின் போது சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து மசூதியின் காப்பாளர் மஹர் ஆலம் கூறியதாவது:

பவன் ஜெய்ஸ்வாலின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் ஊர்வலத்தில் 500 பேர் இருந்தனர். அவர்கள் மசூதி அருகே வந்தபோது திடீரென கற்களை வீச தொடங்கினர். ஜெய் ஸ்ரீராம் என்றபடியே கற்களை வீசி மசூதியை சேதப்படுத்தினர் என்று கூறினார்.

இது குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.