ஜலந்தர்: பாஜகவுக்கு எதிராக, பஞ்சாபில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராடி வருவதால், பதின்டா மாநகராட்சித் தேர்தலில், 50 இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது பாஜக.

வேட்புமனுவை தாக்கல்செய்ய, பிப்ரவரி 3ம் தேதி கடைசிநாள் என்ற நிலையில், மொத்தம் 42 வேட்பாளர்களே, பாஜக சார்பில், தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரோன்மணி அகாலிதள் கட்சியுடன் கூட்டணியில் இருந்த காலக்கட்டத்தில், பதின்டா மாநகராட்சியில் மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்டது பாஜக. தற்போது கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், தனித்துப் போட்டியிட வேண்டிய நிலையில், பதின்டாவில் நிறுத்துவற்கு 50 வேட்பாளர்களைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சிக்கு.

மேலும், பாஜக வேட்பாளர்கள், விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் போஸ்டர்கள் கிழிக்கப்படுகின்றன மற்றும் அவமதிக்கப்படுகின்றன.