பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடையே மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

இதையடுத்து தமிழகம் வந்துள்ள அமித்ஷா இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் பேசி பஞ்சாயத்து செய்ததாகவும் அதில் நயினார் நாகேந்திரனை ஒருமனதாக தேர்வு செய்வது எனவும் முடிவெடுத்து அனைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாநில தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டதுடன் இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அகில இந்திய தலைமையின் முடிவை ஏற்று மற்ற யாரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

மேலும், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கட்சிக்குள் அவருக்கு போட்டி பலமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.