தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை சர்வதேச அளவில் பா.ஜ.க.வுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மா மற்றும் டெல்லி மாநில செய்தி தொடர்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு பா.ஜ.க. கட்டுப்பாடு விதித்துள்ளது.
நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர் எது குறித்து விவாதம் செய்யப்போகிறோம் என்பதை முதலில் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் தவிர பட்டியலிடப்பட்ட முக்கிய பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விவாத நிகழ்ச்சிகளில் வாய்க்கு வந்தபடி பேசாமல் கேள்விகளை தைரியமாகவும் நிதானமாகவும் எதிர்கொள்ள வேண்டும்.
கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவதூறாக யாரும் பேசக்கூடாது அரசின் சாதனைகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஞானவாபி மசூதி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் 15 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.