கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு பாஜக மீண்டும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் காலியாக இருந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 25-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், 3 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக, மம்தா கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், வெற்றிகளை குவித்த நிலையில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக பாஜக மீண்டும் பின்னடைவை சந்தித்து வருவது உறுதியாகி உள்ளது.
3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, இது மக்களின் வெற்றி என்றும், இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இது மதச்சார்பின்மை, ஒற்றுமைக்கானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரானது. பாரதீய ஜனதாவின் அதிகார அராஜகத்துக்கு கிடைத்த பதிலடி” எனவும் அவர் கூறினார்.