சென்னை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா மூத்த நிர்வாகி எச்.ராஜா தோல்வி, திமுக வேட்பாளர் மாங்குடியிடம் 21,485 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், களம் கண்டார். இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டார். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே முருகன் பின்னடைவு, முன்னிலை என்று மாறி மாறி வந்தது. 11 சுற்றுகள் வரை முருகன் முன்னிலையில் இருந்தார். பின்னர் அனைத்து சுற்றிலும் கயல்விழி முன்னிலை பெற்றார். 24வது சுற்றின் முடிவில் கயல்விழி 85,513 வாக்குகளும், முருகன் 84,905 வாக்குகளும் பெற்றனர். 25-வது சுற்று நடந்தபோது மூலனூர் பகுதி பிச்சைக்கல்பட்டி வாக்குச்சாவடியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதன்பின், மீண்டும் 25வது சுற்று எண்ணிக்கை நடந்தது. திமுக வெற்றி முகத்தில் இருந்ததால் திடீரென முருகன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று குளறுபடி உள்ளதால் இத்தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், முடிவை அறிவிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பவன்குமார் 25-வது சுற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கையை வாய்மொழியாக மட்டும் கூறி விட்டு முடிவை அறிவிக்காமல் திடீரென இரவு 7 மணியளவில் மையத்தை விட்டு வெளியேறினார்.

நீண்ட நேரமாகியும் அவர் எண்ணிக்கை மையத்திற்கு வரவே இல்லை. இரவு வரையில் முடிவு தெரியாமல் பரபரப்பு காணப்பட்டது. இதேபோல், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க. வேட்பாளர் மாங்குடி களத்தில் நின்றார். இவர்களில், மாங்குடி 73,334 வாக்குகளும், எச்.ராஜா 53,524 வாக்குகளும் பெற்றனர். இதனால், மாங்குடியிடம் 21,485 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.