சண்டிகர்:

ரியானா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சைகளுக்கு வலைவீசி அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆதரவை வசப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மீண்டும் அரியனை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் கடந்த 21ந்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அங்கு ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் தேவைப்படும் பட்சத்தில் பாஜகவுக்கும்,காங்கிரசுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாரதிய ஜனதாக் கட்சி 40 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 31 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சித் தலைவர்கள் ஜேஜேபி உள்பட உதிரிக்கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை பிடிக்க வலைவீசி வந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இல்லத்தில் அரியானா தேர்தல் முடிவு குறித்து அவசர ஆலோசனை நடைபெற்றது. இதில், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா,  அரியானா மாநில பாஜக தலைவர் அனில் ஜெயின், பி.எல்.சந்தோஷ், பாஜக எம்.பி. சுனிதா துக்கல் மற்றும் கோபால் கண்டா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்குகொண்டனர்.

அதைத்தொடர்ந்து உதிரிகள் மற்றும் சுயேச்சைகளை இழுக்கும் பணி நள்ளிரவே தொடங்கியது. இதன் பயனாக,  சில கட்சிகளும், சுயேட்சைகளும் பாஜக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.

அரியானா  லோகித் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான கோபால் கண்டா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்தார். அதுபோல,  சுயேட்சை எம்.எல்.ஏ ரஞ்சித் சிங் உள்பட சிலர் பாஜக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதன் காரணமாக பாஜக பெரும்பான்மையை எட்டி உள்ளது.

இதைத்தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு  பாஜக தலைவர்கள் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.