பெங்களூரு
பிரதமர் மோடி இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக இலவசம் குறித்த அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளது.
நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கு இறங்கு முகம் உள்ளதாகப் பல அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இதையொட்டி கர்நாடகாவில் பாஜக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது/ இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தலைமையில் நடந்த நிகழ்வில் வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஒவ்வொரு வட்டத்திலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளைக் களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்றும் மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தைத் தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இலவசங்கள் வழங்குவதை எதிர்த்துத் தொடர்ந்து பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. எனவே அரசியல் நோக்கர்கள் பாஜகவின் இந்த அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.