சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ஹலால் இறைச்சியை வைத்து அரசியல் செய்து வரும் பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் ஹலால் சான்றுடன் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறக்கும் ரிலையன்ஸ், அதானி, ராம்தேவ் உள்ளிட்டோரின் நிறுவனங்களின் ஏற்றுமதியை தடுத்து நிறுத்துமா ? என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ப்ரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்துக்களின் கடையில் இருந்து முஸ்லிம்கள் இறைச்சி வாங்காத நிலையில் முஸ்லிம்களின் கடைகளில் இருந்து மட்டும் இந்துக்கள் ஏன் இறைச்சி வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரும் கர்நாடக பா.ஜ.க. தலைவருமான சி.டி. ரவி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ப்ரியங்க் கார்கே, “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ராம்தேவ் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அதானி வில்மர் லிமிடெட், ஓஎம் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், டாபர் இந்தியா லிமிடெட், கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் மற்றும் அமுல்ஃபெட் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் ஜமியத் உலமா ஹலால் அறக்கட்டளையிடம் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஹலால் இறைச்சி ஏற்றுமதி செய்கிறது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது” என்று குறிப்பிட்ட அவர் இந்துக்களால் நடத்தப்படும் இந்த ஹலால் வியாபாரத்தை சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தடுத்து நிறுத்த திராணி உண்டா என்று சவால் விடுத்தார்.
இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதற்காக அந்நிறுவனங்களில் இஸ்லாமியர்களை பணி அமர்த்தி இஸ்லாமிய முறைப்படி இறைச்சி வெட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தே ஜமியத் உலமா ஹலால் அறக்கட்டளை ஹலால் சான்றிதழ் வாழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.