பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்:ஐ பாஜகவில் சேர்ப்பதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், 3 மஜத உறுப்பினர்களும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதையொட்டி காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை இழந்தது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக இந்த 17 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த 17 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடத் தடை இல்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இது அந்த உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் ஓரளவு திருப்தியை அளித்துள்ளது எனக் கூறலாம்.
அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடத் தயாரான அந்த 17 உறுப்பினர்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். அத்துடன் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல்களில் இந்த 17 பேரில் 15 பேர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு அளிக்கக் கடைசி தேதி வரும் 21 ஆகும்.
இந்நிலையில் இவர்களை கட்சியில் சேர்த்ததற்கு சில பாஜக தலைவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். பாஜக மக்களவை உறுப்பினரான பச்சே கவுடாவின் மகன் சரத் பச்சே கவுடா தற்போது பாஜகவில் இணைந்தவர்களில் ஒருவரான நாகராஜ் பாஜக சார்பில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேச்சை ஆகத் தாம் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவில் போட்டியிட்ட சரத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாகராஜ் இடம் தோல்வி அடைந்தார். சரத் சுயேச்சையாக போட்டியிட்டால் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்
அதைப் போல் அதானி தொகுதியிலும் பாஜகவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் வருடச் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது துணை முதல்வராக உள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குமதல்லியிடம் தோல்வி அடைந்தார். மகேஷ் குமதல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
உறுப்பினராக இல்லாமல் துணை முதல்வராகி உள்ள சாவடி இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார். அதே வேளையில் குமதல்லியின் ஆதரவைத் தொடர அவரும் பாஜக சார்பில் போட்டியிட வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த குழப்பம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.