போபால்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெண் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ரூ.50 – 60 கோடி லஞ்சம் அளிப்பதாக பாஜகவினரால் பேரம் பேசப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரு இடங்களை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது இருந்தே பாஜக பலமுறை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயல்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளை பாஜக வென்றது. அதை ஒட்டி தற்போது காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு பாஜக ஆட்சி அமைக்க முயலுவதாக முதல்வர் கமல்நாத் தெர்வித்தார். மேலும் அவர் பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றதாகவும் கூறினார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் ரமாபாய் சிங் செய்தியாளர்களிடம், “பாஜக பல சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசி வருகின்றனர். முட்டாள்கள் மட்டுமே அவர்களிடம் மயக்குவார்கள்.
எனக்கும் அமைச்சர் பதவியும் பணமும் அளிப்பதாக பல முறை தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.
நான் காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொண்டால் எனக்கு ரூ.50 முதல் ரு.6 கோடி பணம் அளிப்பதாக பேரம் பேசினார்கள். இது போல பலரிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. எனக்கு கமல்நாத் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் ஆகும். அதனால் நான் பேரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.