டில்லி

பரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதை ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வரவேற்றுள்ளார்.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. கேரளாவின் பாஜக தொண்டர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி ஒரு பேட்டியில் உச்சநீதிமன்ற அமர்வில் இருந்த பெண் நீதிபதியும் இளம்பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கக் கூடாது என கூறி உள்ளதை சுட்டிக் காட்டினார்.

பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் உதித் ராஜ். இவர் தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புக்கு தலைவராக உள்ளார். சபரிமலையில் இரு பெண்கள் காவலர் உதவியுடன் சென்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உதித் ராஜ் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர், “இரு இளம் பெண்கள் சபரிமலைக்கு சென்று வந்தது என்னைப் பொறுத்தவரை சரியானதாகும். இது எனது சொந்தக் கருத்து. பெண்களை ஏன் சபரிமலைக்கு அனுமதிக்கக் கூடாது ? கடவுள் ஒரு இடத்தில் மட்டுமில்லை எங்கும் உள்ளார். அதே போல் பெண்களும் எல்லா இடங்களிலும் உள்ளனர். அப்படி இருக்க கடவுள் எவ்வாறு பெண்கள் இல்லாத இடத்தில் இருப்பார்?

ஆண்களும் பெண்களிடம் இருந்து வந்தவர்கள் தானே. அப்படியானால் பெண்கள் சுத்தமற்றவர்கள் எனும் போது அவர்களிடம் இருந்து வந்த ஆண்கள் மட்டும் எப்படி சுத்தமானவர்கள் ஆவார்கள்? இதை சம்பிர்தாயம் என சொல்லுவதும் தவறு. சம்பிரதாயங்கள் தவறு என்றால் அவைகளை நீக்க வேண்டும். குழந்தை திருமணத்தை நாம் எதிர்த்து ஒரு முடிவு கட்டவிலையா?

உடன்கட்டை ஏறுவது தடை செய்யப்பட்டது. அதைப் போலவே பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது என கேரள மாநிலத்தில் முன்பு இருந்த உத்தரவும் தடை செய்யப்பட்டது. அதைப் போல கொடூரமான சம்பிரதாயங்கள் தேவையே இல்லை.

நான் தலித் மற்றும் பழங்குடி அமைப்பின் தலைவன் என்னும் முறையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்னும் போது சாதி மற்றும் பாலினத்தை காரணம் காட்டி பிரிப்பது தவறு இல்லையா? இது போல தடை விதிப்பது என்பது பிராமணிய ஆதிக்கத்தின் எதிரொலி ஆகும்” என தெரிவித்துள்ளார்.