டெல்லி: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானபோது, கோமியம் (மாட்டு மூத்திரம்) குடித்து உயிர்பிழைத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
நாடு முழுவதும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் குறைந்தும், சில மாநிலங்களில் அதிகரித்தும் காணப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மேலும் 2.09லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் 18,31,268 பேர் உள்ளனர்.
இந்த சூழலில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. ஆனால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே போபால் தொகுதியைச் சேர்ந்த சர்ச்சை புகழ் பாஜக பெண் எம்.பி.யான சாத்வி பிரக்யாசிங்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அவரது பதிவில், இன்று எனக்கு கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட்டில் பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் “என்று தெரிவித்து உள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, தினமும் கோமியம் குடித்து உயிர் பிழைப்பதாகவும், கொரோனா வைரஸைத் தடுக்க கோமியத்தைத் தாண்டிய மருந்து எதுவும் இல்லை என்று பரபரப்பு கருத்தை உதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.