18வது மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் மூத்த சகோதரியான புரந்தேஸ்வரி பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி. ராமாராவின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில பாஜக தலைவராக உள்ள புரந்தேஸ்வரி 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
65 வயதான புரந்தேஸ்வரியின் பெயர் சபாநாயகர் தேர்வுக்கு பரிசீலனையில் உள்ள நிலையில், மீரா குமார், சுமித்ரா மகாஜனை அடுத்து சபாநாயகர் பதவியேற்க இருக்கும் மூன்றாவது பெண் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், 17வது மக்களவையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் பிர்லா சபாநாயகராக பதவி வகித்த நிலையில் துணை சபாநாயகராக யாரும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தனர்.
இம்முறை துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பாஜக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.