டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு போட்டி நிலவிய நிலையில், 18வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி. ஓம். பிர்லா தேர்வாகி உள்ளார். அவர் இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவி ஏற்றுள்ளார்.  அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினர்.

இதையடுத்து, இடைக்கால சபாநாயகரின் கடமைகளை நிறைவேற்றியதற்காக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப்க்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் மூன்றாவது முறையாக மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது.  பொதுவாக மக்களவை சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 18வது மக்களவைக்கான சபாநாயகர் பதவிக்கு தேர்தல் போட்டி மூலமே நடைபெற்று ள்ளது.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில், மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். ஆனால் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 8 முறை எம்பியாக இருந்த அக்கட்சியின் கொடிக்குன்னிலை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியது . இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர வேண்டும் என கருதிய பாஜக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்.

மரபுப்படி மக்களவைத் துணைத்தலைவர் பதவியை எதிர்கட்சிக்கு அளித்தால் ஆதரவு அளிப்பதாக மல்லிகார்ஜூனே கார்கே நிபந்தனை விதித்தார். ஆனால் பாஜக தரப்பில் இது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பாஜக கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி. ஓம்பிர்லா சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓம்பிர்லா மனுத்தாக்கலும் செய்தார்.

துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதன் காரணமாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பு முறையில் நடத்தப்பட உள்ள நிலையில், பெரும்பாண்மைக்கு 272 எம்.பிக்களின் ஆதரவு தேவை. மொத்தம் உள்ள 543 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் 236 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால்தான் ஆட்சிக்கு வரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியும் என்பதால் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக முயல்கிற்சித்தது. இதில் வெற்றி பெற்றுள்ளது.