இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட அந்த மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் சிலரும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பேசினர்.
இது தொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம்” என்று கூறியிருந்தார்.
மேலும், “உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களை நீதிமன்றம் தனக்குத்தானே பறித்துக்கொண்டுள்ளது. சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை. நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவிட முடியும். ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் சர்மா கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி உயர் அதிகாரம் பெற்றவர்; ஜனாதிபதியை எவரும் சவால் செய்ய முடியாது. மக்களவை, மாநிலங்களவை மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர், உச்சநீதிமன்றம் அதற்கு உத்தரவிட முடியாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பில் நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் சில நடவடிக்கைகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன’ என்று குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து பாஜக எம்பி-க்களின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவிர உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட பதிவில், ‘நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. ஆனால், இத்தகைய கருத்துகளை பாஜக ஆதரிக்கவில்லை. பாஜக இந்த கருத்துகளை நிராகரிக்கிறது. பாஜக நீதித்துறையை மதிக்கிறது; அதன் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது என்று பூசிமொழுகினார்.
இந்த நிலையில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உயர் சட்ட அதிகாரியான அட்டர்னி ஜெனரலின் (ஏஜி) ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.