சீதாப்பூர்
பாஜக மக்களவை உறுப்பினர் சாக்ஷி மகராஜ் பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை சந்தித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்த ஒரு 17 வயது பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் செங்கார் உள்ளிட்டோர் மீது அந்த பெண் குற்றச்சாட்டு அளித்ததை ஒட்டி செங்காரின் ஆதரவாளர்கள் அப்பெண்ணின் தந்தையை கடுமையாக தாக்கினர்.
காவல்துறையினர் அடிபட்டு கிடந்த அந்த சிறுமியின் தந்தையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சில தினங்களில் மர்ம மரணம் அடைந்தார். அந்த சிறுமி உத்திர பிரதேச முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்று காப்பாற்றப்பட்டார் . அந்த பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட சிலரை கைது செய்து சீதாப்பூர் சிறையில் அடைத்துள்ளது. குல்தீப்சிங் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உன்னாவ் மக்களவை தொகுதியின் சார்பில் சாக்ஷி சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாக்ஷி சிங் நேற்று சீதாப்புர் சிறைக்கு சென்று பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் செங்காரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் சாக்ஷி மகராஜ், “குல்தீப் சிங் வெகுநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு நன்றி சொல்வதற்காக இன்று அவரை சிறையில் சந்தித்தேன்” என தெரிவித்துள்ளார்.