டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்ம பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரலில் தொடங்கி ஜுன் 1ந்தேதியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியானது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களை எந்தவொரு கட்சியும் தனித்து பெறாத நிலையில், அதிக தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 293 எம்.பி.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி 3வது முறையாக ஜூன் 9ந்தேதி பதவி ஏற்றார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. காங்கிரஸ் கட்சி தங்களது கட்சியை சேர்ந்த குரியவன் என்பவர்தான் மூத்த உறுப்பினர் என கூறிய நிலையில், பாஜக சார்பில், மூத்த உறுப்பினர் பர்த்ருஹரி மஹ்தாப் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் முக்கிய அதிகாரிகள், கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.