லக்னோ
பெண் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் குறித்துக் கற்பித்தால் பலாத்காரத்தைத் தடுக்கலாம் என உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது
பாஜகவை சேர்ந்த பல பிரமுகர்கள் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருவதும் அதனால் கடும் சர்ச்சைகள் உண்டாவதும் வழக்கமாகி வருகிறது. அவர்களில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங் ஒருவர் ஆவார். அவர் கடந்த நவம்பர் மாதம் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி இல்லை எனவும் தவறு செய்த பொதுமக்களில் ஒருவர் எனவும் கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று உபி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு 19 வயது தலித் பெண் தாகூர் இனத்தை சேர்ந்த 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29 ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருடைய உடல் இரவோடு இரவாக அரசால் தகனம் செய்யப்பட்டது.
இதனால் நாடெங்கும் அதிர்வலைகள் கிளம்பின. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ஹத்ராஸ் மாவட்டம் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய உ பி காவல்துறையினர் ராகுல் காந்தியைக் கீழே தள்ளினர் அத்துடன் அவர் மீதும் பிரியங்கா மீதும் வழக்குப் பதிந்தனர். இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது..
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில பாலியா மாவட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு நிக்ழ்வில் பேசுகையில் “ஹ்த்ராஸ் மாநிலத்தில் ஒரு தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் இது போன்ற நிகழ்வுகளை நமது கலாச்சாரம் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். ஆளுமை மற்றும் வாளைக் கொண்டு இல்லை.
நற்பண்புகள் குறித்து பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அரசின் கடமை மக்களைக் காப்பது மட்டுமே ஆகும். ஆனால் பெற்றோர்களின் கடமை தங்கள் மகளுக்கு அமைதியான பழக்க வழக்கங்களையும் பொறுமையையும் கற்பிக்க வேண்டும். இது போன்ற கட்டமைப்பு மூலம் மட்டுமே நமது நாடு அழகானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குப் பெண்களின் பழக்க வழக்கங்களே காரணம் என்னும் பொருள்பட சிங் பேசியது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. டிவிட்டரில் பல ஆர்வலர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் செய்யும் தவறுகளுக்கும் பெண்களே பொறுப்பு என அவர் கூறுவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.