சேலம்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது.

பாஜக சார்பில் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் வானதி சீனிவாசன்.   இவர் மகன் ஆதர்ஷ் என்பவருக்கு தற்போது 22 வயதாகிறது.  ஆதர்ஷ் சென்னைக்கு காரில் வந்துள்ளார்.   இந்த காரை அவரே ஓட்டி வந்துள்ளார். அந்த கார் மிக வேகமாக வந்துள்ளது.

ஆதர்ஷ் ஓட்டிச் சென்ற கார் இரவு சுமார் 11.30  மணிக்கு சேலத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பாலத்தில் இறங்கும் போது தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.  இந்த விபத்தில் கார் நொறுங்கியது.  அப்போது ரோந்து வந்த காவல்துறையினர் காரில் இருந்த ஆதர்ஷை மீட்டுள்ளனர்.  அவருக்குக் காயம் ஏற்படவில்லை.

இந்த தகவல் அறிந்த சேலம் பாஜக் நிர்வாகிகள் விரைந்து வந்து ஆதர்ஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பிறகு அவர் வேறொரு கார் மூலம் சென்னை வந்துள்ளார்.  காவல்துறையினர் ஆதர்ஷ் வேகமாகக் காரை ஓட்டி வந்ததால் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி உள்ளனர்.