பரேலி
உத்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா தனது மகள் சாக்ஷி மிஸ்ரா தம்மை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பிதாரி செயின்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா பாஜகவை சேர்ந்தவர் ஆவார். இவருடைய மகள் சாக்ஷி மிஸ்ரா ஒரு தலித் இளைஞரை காதலித்து கடந்த வியாழன் அன்று மணம் புரிந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது தந்தையை பற்றி குற்றச்சாட்டுக்கள் தெரிவித்துள்ளார்
அந்த வீடியோவில் சாக்ஷியும் அவர் கணவர் அஜிதேஷ் குமாரும் தங்களுக்கு ராஜேஷ் மிஸ்ரா, அவர் மகன் மற்றும் உறவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தன்னையோ தனது கணவரையோ ராஜேஷ் மிஸ்ரா ஏதும் செய்தால் அவரை கம்பி எண்ண வைப்பதாகவும் சாக்ஷி மிரட்டி உள்ளார்.
இது குறித்து ராஜேஷ் மிஸ்ரா, “நான் எனது மகள் திருமணத்தை எதிர்க்கவில்லை. நான் அந்த மணமகனின் வயது மற்றும் வருமானம் குறித்து கவலையில் உள்ளேன். என் மகளை விட அவர் கணவர் 9 வயது மூத்தவர் ஆவார். அத்துடன் அவருடைய வருமானம் மிகவும் குறைவு என்பதால் எனது மகளின் எதிர்காலத்தை குறித்து கவலை கொள்கிறேன்.
நான் எனது மகளுக்கு எவ்வித தீங்கும் செய்ய எண்ணவில்லை. அவர்கள் இருவரும் எனது இல்லத்துக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் அவர்களுக்கு எவ்வித தீங்கும் புரிய மாட்டேன் என்பதை எனது கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் என்றும் எனது மகள் சாக்ஷி துயருறுவதை விரும்ப மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.