மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி உள்ளார். பிறந்த நாளில் மக்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாஜக எம்எல்ஏ மீது காவல்துறையினர் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவே நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே அனைத்துவிதமான நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், வார்தா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஊரடங்கை மீறி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
வார்த மாவட்டத் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாதராவ் கெச்சே என்பவர், தனது பிறந்தநாளை வீட்டில் கோலாகலமாக கொண்டிய நிலையல், அந்த பகுதி மக்களை அழைத்து அனைவருக்கும் லவசமாக உணவு பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தில் எந்தவித பாதுகாப்பு கவசம் இன்றியும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் திரண்டிருந்தனர்.
மக்கள் கூட்டம் சேரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஊரடங்குஉத்தரவை மீறி பாஜக எம்எல்ஏ இந்த செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், அனைத்து மக்களையும் அங்கிருந்து அகற்றினர். பாஜக எம்எல்ஏ தாதராவ் கெச்சே மீது தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பாஜக எம்எல்ஏவோ இது அரசியல் சதி என அங்கலாய்த்துள்ளார்.