அகர்தலா
பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகளான அனிந்திதா பவுமிக் என்னும் பிசியோ மருத்துவர் பாஜக அரசை விமர்சித்தற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அருண் சந்திர பவுமிக் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய மகளான அனிந்திதா பவுமிக் என்பவர் திரிபுரா மெடிகல் கல்லூரி மருத்துவமனையில் பிசியோ மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார். இவர் முகநூலில் பல பதிவுகள் இடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவ்வகையில் அனிந்திதா கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் ஒரு மருத்துவமனையில் ஒரு இயந்திரம் முறையான டெண்டர் வெளியிடாமல் ஒரு தனியாரிடம் இருந்து வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதையொட்டி அவர் பணி புரியும் மருத்துவ நிர்வாகம் அவருடைய முகநூல் பதிவை நீக்குமாறு வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “நான் எனது முகநூல் பதிவில் மருத்துவமனையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால் என்னை அந்த பதிவை நீக்க வற்புறுத்தியது எனக்கு மன உளைத்தலை அளித்தது. என்னை மிரட்டிய மருத்துவமனை நிர்வாகம் எனது தந்தையிடம் இது குறித்துத் தெரிவித்து அவரை விட்டு எனது பதிவை நீக்க வலியுறுத்தியது. எனது பதிவில் மருத்துவமனை மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதியாததால் நான் அதை நீக்க மறுத்தேன்” எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனை விதிகளை மீறி நடப்பதால் இந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்த உத்தரவு அமலில் உள்ள வரை தலைநகரை விட்டு வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது திரிபுராவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அனிந்திதா, “கடந்த 2018 ஆம் ஆண்டு திரிபுராவில் பாஜக அரசு அமைந்ததில் இருந்தே கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இடது சாரி ஆட்சியின் போது அரசை விமர்சித்ததாக என்மீது பல வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் எனக்கு எனது நிலையை எடுத்துச் சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு என்னை எனது சமூக வலைத் தள பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது” என வருத்தத்துடன் கூறி உள்ளார்.