ஐதராபாத்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

.

தெலுங்கானா மாநிலத்தின் கோஷமகால் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் பாஜக வை சேர்ந்தவர் ஆவார்.  இவர் ஐதராபாத் நகரில் ஜுமீரத் பஜார் பகுதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அரசியான அவந்தி பாய் லோத் என்பவரின் சிலையை நிறுவ முயன்றுள்ளார்.   இந்த அரசி சுதந்திர போராட்ட வீராங்கனை ஆவார்.

நேற்று முன் தினம் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு ராஜா சிங் தனது ஆதரவாளர்களுடன் இந்த பகுதிக்கு வந்து சிலையை நிறுவ முயன்றுள்ளார்.   அங்கு சிலை வைக்க அனுமதி வாங்கப்படாததால் காவல்துறையினர் அதை தடுத்துள்ளனர்.   இரு தரப்பினருக்கும் இடையில் இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது.   அப்போது காவல்துறையினர் தம்மை தாக்கி தலையில் காயம் ஏற்பட்டதாக ராஜா சிங் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தவறானது எனஅப்பகுதி காவல்துறை ஆணையாளர் ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார்.   மேலும் ராஜா சிங் ஒரு கல்லை எடுத்து தாமே தலையில் அடித்து காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் அவர் தெரிவித்தார்.  இது குறித்து காவல்துறையினர் அளித்துள்ள வீடியோவில் ராஜா சிங் ஒரு கல்லை எடுத்து தன் தலையில் தானே தாக்கிக் கொண்டுள்ள காட்சி பதிவாகி உள்ளது.

அத்துடன் ஏற்கனவே அரசி அவந்தி பாய் லோத் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அதை தற்போது ஆறு அடி சிலையாக மாற்றுவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=LrzKj3y2m5o]

 

ஜுமீரத் பஜார் பகுதியில் தற்போது கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.   காவல்துறையினர் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.   இந்த தாக்குதலுக்கு மாநில பாஜக தலைவர் லட்சுமண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அவர் தற்போது நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது  ஓவைசியின் கட்சியான ஐமிம் நடத்தும் கொடுங்கோல் ஆட்சியா என வினா எழுப்பி உள்ளார்.