ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததை எதிர்த்து நடந்த பேரணியில் அம்மாநிலத்தின் கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ள இரு பாஜக அமைச்சர்கள் கலந்துக் கொண்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உள்ள பழங்குடி இஸ்லாமிய சிறுமி கடந்த ஜனவரி மாதம் காணாமல் போய் விட்டார். எட்டு வயதான அந்த சிறுமி ஆசிஃபா காணாமல் போய் ஏழு தினங்கள் கழித்து ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பிணமாக கண்டு எடுக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அந்த சிறுமி கடத்தி போதை மருந்து கொடுக்கப்பட்டு கொடூர சித்திரவதைகள், பலாத்காரம் ஆகியவைகளுக்குப் பின் கொல்லப் பட்டதாக தெரிய வந்தது.
இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்ட ஒரு 17 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய பழங்குடி மக்களை பயமுறுத்த இவ்வாறு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த குற்றத்துக்கு துணையாக இருந்ததாக காவல்துரை அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரிந்தர் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதுகளை தொடர்ந்து இந்து ஏக்தா மன்ச் என ஒரு அமைப்பு தீபக் கஜுரியாவை விடுதலை செய்ய போராட்ட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் மாநில பாஜக அமைச்சர்கள் இருவர் கலந்துக் கொண்டுள்ளனர். காஷ்மீர் மாநில கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ள இரு பாஜக அமைச்சர்கள் இந்தப் பேரணியில் கலந்துக் கொண்டது, மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
அந்தப் பேரணியில் கலந்துக் கொண்டு பேசிய போது அமைச்சர்கள் அரசை கடுமையாக விமர்சித்தனர். தற்போது காட்டு ஆட்சி நடப்பதாகவும், சம்பந்தமில்லாமல் பல வயது வாரியாக அதாவது 17, 22, 28 மற்றும் 37 வயதுக்காரர்களை கைது செய்தது மிகவும் தவறானது எனவும் குறிப்பிட்டனர். மேலும் இந்த ஆட்சியில் இந்த சிறுமி மட்டுமின்றி பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.
காஷ்மீர் மாநில வனத்துறை அமைச்சர் சவுத்ரி லால் சிங் மற்றும் தொழில்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகிய அமைச்சர்கள் இந்தப் பேரணியில் கலந்துக் கொண்டதற்கு ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூட்டணியில் இருந்துக் கொண்டே ஒரு சிறுமியின் பலாத்காரம் மற்றும் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு ஆதரவு அளிப்பது தவறானது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.