இனி பெண் கன்றுகள் மட்டுமே அதிகம் பிறக்கும் : பாஜக அமைச்சர் உறுதி

 

டேராடூன்

 

பாலின பிரிவு விந்தணுக்கள் மூலம் இனி பெண் கன்றுகள் மட்டுமே அதிகம் பிறக்க உள்ளதாக மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

 

பொதுவாக நாட்டில் பசுக்களை வளர்க்க விரும்பும் அளவுக்குக் காளைகளை யாரும் வளர்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் பசுக்களின் மூலம் பால் பொருட்கள் தயாரித்து வருமானம் கிடைப்பதே ஆகும். ஆனால் ஒரு தாய்ப்பசு கருவுறும் போது அந்தக் கன்று பெண் ஆக மட்டுமே பிறக்கும் என யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

 

இதையொட்டி விலங்கியல் ஆய்வாளர்கள் பெண் கன்றுகளை மட்டுமே ஈன்றெடுக்கும் வகையில் காளையின் விந்தணுக்களைப் பிரிக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் உத்தரகாண்ட மாநிலம் கடந்த மார்ச் மாதம் வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய வைகை விந்தணுக்களின் மூலம் 90% பெண் கன்றுகள் பிறக்க  உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

உத்தரகாண்ட மாநிலத்தில் நடந்த மதர் டைரி பால் பண்ணை நிகழ்வில் மத்திய விலங்குகள் நல அமைச்சர் கிரிராஜ் சிங், “இனி பசுக்கள் செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரிக்க உள்ளன. அதனால் இந்த புதிய வகை விந்தணுக்களைச் செலுத்தி அதிக அளவில் பெண் கன்றுகள் பிறக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதனால் 2019-20 ஆம் வருடம் 30 லட்சம் பசுங்கன்றுகள் பிறக்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்