மும்பை

காராஷ்டிராவின் பால்கர் பகுதியில் சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவினர் எனக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஒரு காரில் சென்ற ஒரு காரில் இருந்த 2 சாமியார்கள் மற்றும் ஓட்டுநரைத் திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் தாக்கி கொலை செய்தது.   விசாரணையில் மும்பையைச் சேர்ந்த சாதுக்களான சிக்னே மகராஜ் கல்பவ்ரூக்‌ஷ கிரி, சுசில் கிரி மகராஜ் மற்றும் ஓட்டுநர் பெயர் நிலேஷ் துல்கட் என்பது தெரிய வந்தது.

சூரத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்று விட்டு வரும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையொட்டி 101 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிகழ்வுக்கு இஸ்லாமியர்கள் காரணம் என முதலில் கூறப்பட்டது.   ஆனால் அது தவறான த்க்வல் எனவும் கைது செய்யப்பட்டோரில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை எனவும் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவித்தார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் செய்தியாளர்களிடம், “மகாராஷ்டிர மாநிலத்தில் கும்பலால் இரு சாதுக்கள் மற்றும் அவர்கள் ஓட்டுநர் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை 101 பேர் மீது குற்றப்பத்திரிகை பதியபடுள்ளது.  அதில் 61 மற்றும் 65 ஆக குறிப்பிடபடுள்ள ஈஸ்வர் நிகோலே மற்றும் பாவு சாதே ஆகியோர் இருவரும் பாஜகவின் நிர்வாகிகள் ஆவார்கள்.

மத்திய அரசின் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருவர் இவ்வாறு சாதுக்களின் கும்பல் கொலையில் ஈடுபட்டது மிகவும் வருந்தத்தக்கது.  அரசு இந்த இருவர் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது குறித்து பாஜக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

சாதுக்கள் கொலை நிகழ்வுக்குப் பிறகு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.   ஆனால்  கடந்த இரு வருடங்களாக  கும்பல் கொலைக்கு எதிராக மத்திய அரசு எவ்வித சட்டமும் இயற்றவில்லை.  இது போல் பல மாநிலங்களில் பல நிகழ்வுகள் நடந்தும் மத்திய அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை,  இது போல நிகழ்வுகளில் பல பாஜக அமைச்சர்களும் பங்கு பெற்றுள்ளனர்”எனத் தெரிவித்துள்ளார்.