அகர்தலா
திரிபுரா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக வதந்தி கிளம்பியதால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவி வகித்து வருகிறார். இவர் மீது திருணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறி உள்ள பலருக்கும் அதிருப்தி நிலவி வருகிறது. இவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சுதிப் ராய் பர்மன் தலைமையில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் பர்மன் மற்றும் திருணாமுலில் இருந்து கட்சி மாறிய அவர் ஆதரவாளர்கள் 5 பேர் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பிப்லாப் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் ஒரு சில நிர்வாக விவரங்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்தனர். ஜூலை மாதம் ஒரு சில பாஜக ஆதரவாளர்கள், ‘பிப்லாப் ஐ விலக்குங்கள், பாஜகவை காப்பாற்றுங்கள்’ என கோஷம் எழுப்பினர்.
ஆனால் பாஜக தலைமை பிப்லாப் குமார் தேப் ஐ பதவியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. இதனால் அதிருப்தியாளர்கள் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. இவை வதந்திகள் என சொல்லப்பட்டாலும் பாஜக தலைவர்கள் இதனல் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி மூத்த பாஜக தலைவர் பிஎல் சந்தோஷ் திரிபுர வந்துள்ளார்
இது குறித்து மாநில பாஜக தலைவர் மானிக் சகா, “பாஜக ஒரு குடும்பம் போன்றது. இங்கு ஒரு சில மனத் தாங்கல்கள் இருக்கலாம். ஆனால் அது பிரிவு வரை போகாது. அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடனும் சந்தோஷ் தனியாகவும் கூட்டாகவும் விவாதிக்க உள்ளார். தற்போதைய நிலையில் பாஜக எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனைகள் அளிக்க உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பர்மன் கோஷ்டி எம் எல் ஏ ஒருவர் தங்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் இருப்பது உணை எனவும் இதனால் தாங்கள் திருணாமுலில் இணையலாம் என வதந்திகள் எழுந்ததாகவும் தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் உள்ள கருத்து வேற்றுமைகளைப் போக்கிக் கொள்ளவே தாங்கள் விரும்புவதாகவும் திருணாமுலில் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் திரிபுரா மாநில திருணாமுல் தலைவர் ஆசிஷ் லால் சிங், “மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்ததால் திரிபுராவில் கட்சிக்கு மேலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இரண்டே வாரத்தில் 11,300 பாஜக தொண்டர்கள் திருணாமுல் கட்சியில் இணைந்துள்ளனர். கட்சி மாறிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வது குறித்து தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.