டெல்லி: கொரோனா பரவல் காரணமாக, மூச்சு பகுப்பாய்வு சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் பாகா டெல்லி காவல்துறையை வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் 3000 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவி இருக்கிறது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் ஒருவர் குடித்திருக்கிறாரா இல்லையா என்பதை அறிய பயன்படுத்தப்படும் மூச்சு பகுப்பாய்வு சோதனையை டெல்லி காவல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் பாகா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வைரஸ் பரவுவதற்குப் பின்னால் மூச்சு ஒரு முக்கிய காரணம். எனவே, நிலைமை இயல்பான பிறகு சோதனையை மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 28 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து சர்வதேச விமானங்களும், பயணிகளும் இப்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பிப்ரவரி 29 அன்று ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஒரு இத்தாலிய நாட்டவர் உட்பட, கடந்த 48 மணி நேரத்தில் 3 பேர் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு நோயாளிகள் டெல்லி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்.