போபால் :
பதினொரு ஐ எஸ் ஐ உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பாஜக தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவ ரகசியம் பாகிஸ்தானுக்கு பரிமாறப்படுவதாக மத்தியபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்றுமுன் தினம் சந்தேகத்திற்கிடமான சர்வதேச தொலைபேசி அழைப்பு ஒன்றை இடைமறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மத்தியபிரதேச பாஜகவில் முக்கிய புள்ளியாக வலம் வரும் துருவ் சக்ஸேனா என்பவர் ஐ எஸ் ஐ உளவாளிகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், பாஜகவின் தேசிய பொதுச்செயலர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் துருவ் சக்ஸேனா நெருங்கிய நட்பு கொண்டிருப்பதை பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
இவரை தொடர்ந்து, குவாலியர் நகர பாஜக பெரும்புள்ளியின் மைத்துனர் ஜிதேந்திர தாகூர் என்பவரும் இதில் உடந்தையாக இருப்பது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் தலைவர் சஞ்சீவ்சாமி், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட பல்ராம் என்பவரை கைது செய்திருப்பதாகவும் அவர் மூலம் மேலும் 10 பேரை பிடித்திருப்பதாகவும் கூறினார்.