கோவை: இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்த பாஜக உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இஸ்லாமிய அமைப்பினர், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
இதையடுத்து, கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கைதான கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தபோது, பிற மதத்தினர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதுாறு கருத்து வெளியிட்டதாக கல்யாணராமன் மீது, கடந்தாண்டு மார்ச் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து ரத்னபுரி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், கல்யாணராமனை போலீசார் தற்போது பிடிவாரண்டில் கைது செய்திருந்தனர். அவருடைய ஜாமின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கல்யாணராமன் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.