டில்லி,

உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தைரியமாக இருங்கள், நாங்கள் இருக்கிறோம் என அத்வானிக்கு பாஜக ஊக்கம் அளித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த 2001-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர்  ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, மீதான வழக்குகளில் சிபிஐ விசாரணையை தொடரலாம். தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடங்களுக்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அத்வானியின் குடியரசுத்தலைவர் கனவு தகர்ந்துவிட்டதாக ஊடகங்களும், அரசியல் விற்பன்னர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதை எப்படி டீல் செய்வது என்பது குறித்து பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கையா நாயுடு ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அத்வானியுடன் தொலைபேசியில் உரையாடிய பாஜக தலைவர் அமித் ஷா, உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டு நீங்கள் அச்சப்படாதீர்கள். பாஜக எப்போதும்போல் உங்களுடன் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியையும், அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசியதாக  தெரிகிறது. நீதிமன்ற உத்தரவு தொடர்பாக மத்திய சட்ட அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீதிமன்ற தீர்ப்பை படித்தப் பிறகுதான் கருத்துச் சொல்ல முடியும் என்றார்.

அதேநேரம் அவர், பாபர் மசூதி இடிப்பு என்பது கரசேவை தொண்டர்களின் திடீர் தன்னெழுச்சியால் நிகழ்ந்த சம்பவம் என்றும் அதில் திட்டமிட்ட சதி இல்லை என்றும் வாதிட்டார்.