சென்னை :
பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர், ரஜினி, அழகிரி, தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான பேட்டி அளித்துள்ளார். வானதி சீனிவாசன் பேட்டியில் உள்ள முக்கிய அம்சங்கள் இப்போது :
“கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஐந்து இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. ஒதுக்கியது. இது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி இருக்காது. சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.விடம் கடினமாக பேரம் பேசி, எங்களின் நியாயமான பங்கை பெறுவோம்.
ஒவ்வொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதையே லட்சியமாக கொண்டிருக்கும். எங்கள் இலக்கும் அது தான். அடுத்த 10 ஆண்டுகள் கடுமையாக உழைப்போம் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்துவோம்.
மு.க.அழகிரி, பா.ஜ.க,வில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் வருங்காலங்களில் எங்கள் கட்சியில் ஏராளமானோர் சேருவார்கள்” என்று தெரிவித்த வானதி சீனிவாசனிடம், “ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது,” அவர் நிதானமாக அளித்த பதில் இது:
“ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து பல கட்சிகள் காத்திருப்பது போல் நாங்களும் காத்திருக்கிறோம். அவர் முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு எங்கள் நிலையை சொல்கிறோம்”
– பா. பாரதி