காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரை சென்றடைந்தது.
ரகோகரில் தொடங்கிய யாத்திரை காலை 11 மணிக்கு ஷாஜாபூர் வந்தடைந்தது. ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க வழிநெடுகிலும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேவேளையில் ராகுல் காந்தியின் பேரணி செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் தங்கள் கட்சிக்கொடிகளுடன் வந்திருந்து கோஷம் எழுப்பினர்.
பாஜக தொண்டர்களை பார்த்த ராகுல் காந்தி வாகனத்தில் இருந்து இறங்கிவந்த நிலையில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்த இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே யாத்திரையை மேற்கொள்கிறேன். இளைஞர்கள் வேலையிழந்து விட்டனர், அவர்கள் நாள் முழுவதும் தங்கள் மொபைல் போனில் ரீல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் பாஜக சாதி மற்றும் மதவாதத்தை ஊக்குவிப்பதாகவும், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போட்டுக்கொண்டு மக்களை தங்களுக்குள் சண்டையிட தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.