டில்லி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பா ஜ க வில் அதிகம் உள்ளனர் என கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் அரசு சாரா அமைப்பு சமீபத்தில் தேர்தல் ஆவணங்களில் பதிந்துள்ள குற்றங்களைப் பற்றி ஆய்வு நடத்தி ஒரு கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த முடிவில் காணப்படுவதாவது :
பெண்களுக்கு எதிரான குற்றங்களான பலாத்காரம், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 48 சட்டமன்ற உறுப்பினர்களும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 51 பேரில் 14 பேர் பா ஜ க வில் உள்ளனர். அடுத்தபடியாக சிவசேனாவில் 7 பேரும், திருணாமுல் காங்கிரஸில் ஆறு பேரும் உள்ளனர்.
இது தவிர தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கப் பட்டவர்களில் 334 பேர் பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்ததாக வழக்கு பதிவானவர்கள். அதில் சுமார் 48 பேர் பா ஜ கவை சேர்ந்தவர்கள். அடுத்ததாக பகுஜன் சமாஜ் கட்சியினர் 36 பேருக்கும், காங்கிரஸ் கட்சியினர் 27 பேருக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு, வேட்பு மனுவில் பதிந்ததை வைத்து தேர்தல் ஆவணங்களில் காணப்படுபவை. வேட்பு மனுவில் தெரிவிக்காமல் உள்ள குற்றங்கள் இந்த கணக்கெடுப்பில் வரவில்லை.