மும்பை
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கட்சி மாறிய வேட்பாளர்களால் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் முடிய உள்ள நிலையில் இன்று வரை யார் அரசு அமைக்க உள்ளார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. பாஜக மற்றும் சிவசேனா இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 145 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா கட்சி முதல்வர் பதவியை இரு கட்சிகளும் சமமாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர சிவசேனா நிபந்தனை விதித்தது.
தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களில் வெற்றி கிட்டிய போது சிவசேனாவுக்கு 56 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் பாஜக இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையில் 30 வருடங்களாக இருந்த உறவு முறிந்தது. தற்போது தனக்குப் பரம எதிரிகளாக இருந்த தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயல்கிறது. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அசோகா பல்கலைக்கழக திரிவேதி அரசியல் மையம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவில், “கடந்த 2014 ஆம் வருடத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதற்குத் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாதது காரணமாகும். தேர்தல் முடிந்த பிறகு 122 இடங்களைப் பெற்ற பாஜகவும் 63 இடங்களைப் பெற்ற சிவசேனாவும் இணைந்து ஆட்சியை அமைத்தன.
கடந்த மக்களவை தேர்தல் மற்றும் ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியால் இம்முறை இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புக்கு வழி இல்லை என்னும் நிலை இருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. கடந்த 2014 ஆம் வருடம் பாஜக – சிவசேனா வெற்றி பெற்ற தொகுதிகளில் 68 தொகுதிகளில் தற்போது தோல்வி அடைந்துள்ளன. இது 36% வீழ்ச்சியாகும். அதைப் போல் பாஜக மட்டும் 41 தொகுதிகளை இழந்துள்ளது. இது 34% வீழ்ச்சியாகும்.
இந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சி மாறிய 11 பேரை சிவசேனாவும் 15 பேரை பாஜகவும் தேர்தலில் போட்டியிட வைத்தன. பாஜக சார்பில் போட்டியிட்ட 15 கட்சி மாறியவர்களில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் போட்டியிடவில்லை எனில் பாஜகவுக்கு 95 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். பாஜகவின் மூன்று இலக்க வெற்றிக்கு இவர்களே காரணம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.