சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு பாஜக தலைமை விடுத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி துவங்கி ஆகஸ்டு மாதம் 11ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி 19ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் தலைநகர் டெல்லியில் வரும் 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அதிமுகவும் பாஜக கூட்டணியில் உள்ளதால், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட வாயப்பு உள்ளது என தெரிகிறது. மேலும் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்களுக்கு ஆதரவு மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலடி கொடுப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.