கோவை

மிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்வது குறித்து பாஜக முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.  ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு வந்துள்ளது.  திமுக அறுதி பெரும்பான்மை பெற்று அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக உள்ளார்.  பாஜக சார்பில் வெற்றி பெற்ற நால்வரில் வானதி சீனிவாசனும் ஒருவர் ஆவார்.

அவர் நேற்று கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.  அதன் பிறகு வானதி செய்தியாளர்களிடம், “எனக்குக் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் வாக்களித்த மற்றும் தேர்தல் பணி ஆற்றிய பாஜக மற்றும் அதிமுக கட்சியினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியை ஆக்கப்பூர்வமான வகையில் பெற முடியும் அந்த வகையில் மாநில வளர்ச்சிக்குப் பங்காற்றுவோம்.  நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மாநில அரசின் உதவியுடன் செய்வோம்.  தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டணி அமைக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்தது சர்ச்சையை எழுப்பியது.   தற்போது எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்தும் பாஜக தலைமை முடிவு செய்யும் என வானதி கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.