அயோத்தியா:
அயோத்தியா நகரை சுற்றுலாத் தளமாக்குவோம், வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத ஏமாற்றத்தோடு இன்று வாக்களித்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.
அயோத்தியா ஃபசாபாத் மக்களவை தொகுதியில் உள்ளது.
அயோத்தியாவை ராம் நகரி என்றும் சுற்றுலாத் தளமாகவும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
ஆனால், பாபர் மசூதி- ராம ஜென்ம பூமி பிரச்சினையால் சுற்றுலா பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
அயோத்தியாவை சேர்ந்த ஜங் பகதூர் என்ற விவசாயி கூறும்போது, ” கடந்த 1991-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் போது நடந்த ரத யாத்திரையில் பங்கேற்றேன். ராமர் கோயில் கட்ட செங்கலும் அனுப்பி வைத்தேன். என் கடமையை நிறைவு செய்தேன். எல்லாமே வீணாகிப் போனது ” என்றார்.
ஆனால், பகதூரும் அவரது குடும்பத்தினர் 15 பேரும் அடிப்படை வசதிகளான கழிவறை, வீடு, காஸ், வேலைக்காக அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் பிரச்சினையை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் பகதூரின் மருமகள் வந்தனா தேவி. பிரதமரின் விவசாயிகளுக்கான ரூ.2 ஆயிரம் தவிர வேறு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
கழிவறை கட்ட இன்னும் பணம் தரவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க வயல் வெளிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார் வந்தனா தேவி.
அயோத்தியாவை சுற்றுலாத் தளமாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால், நகரம் அசுத்தமாகவும், தெருக்களில் கால்நடைகளும், நாய்களும் சுற்றித் திரிவதாக கூறுகிறார்கள் அயோத்தியா வாக்காளர்கள்.