டில்லி
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாஜக அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள்,, மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துக் கொண்டனர். இதில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.
மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஏகே ஆண்டனி, கே சி வேணுகோபால் மல்லிகார்ஜுன காட்கே, காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, “பாஜக அரசு மிகவும் கடுமையாகத் தனது அதிகார துஷ்பிரயோகத்தை நடத்தி வருகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை சீரழிந்து வருவதை கவனிக்காத பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தும் வகையில் நடந்துக் கொள்கிறது. நாட்டின் ஜனநாயகம் பாஜகவால் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. “ எனத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.