டில்லி
கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட வர்த்தக சலுகைகளை திரும்ப பெற என்னும் சுப்ரமணியன் சாமி எச்சரிக்கையை பாஜக அரசு நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு பல வர்த்தக சலுகைகளை இந்தியா அளித்து வந்தது. அத்துடன் அந்த நாட்டுக்கு வர்த்தகத்துக்கு மிகவும் உகந்த நாடு என்னும் அந்தஸ்தையும் வழங்கியது. இதற்கு பாஜக மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் இந்த சலுகைகளை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்னும் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என அர்சுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்தது. இது குறித்து அரசின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.
அதில், “உலக வர்த்தக அமைப்பில் உள்ள நாடான பாகிஸ்தானுக்கு அந்த அமைப்பிடம் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி வர்த்தகத்துக்கு மிகவும் உகந்த நாடு என்னும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 1209 பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை.
பாகிஸ்தான் அரசு இந்திய நாட்டின் 138 பொருட்களை மட்டுமே வாகாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு அளித்துள்ள அந்தஸ்துக்கு அது முழுமையாக தகுதி பெறவில்லை. ஆயினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அனுமதிக்கப்பட்ட பொருட்களின் வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2017-18 ஆம் வருடம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் 190 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தானில் இருந்து 48.8 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. எனவே வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பாகிஸ்தானால் நல்ல ஆதாயம் உள்ளதால் அந்த அந்தஸ்தை ரத்து செய்ய இயலாது” என தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த சலுகைகளை ரத்து செய்தது. அத்துடன் வர்த்தகத்துக்கு மிகவும் உகந்த நாடு என்னும் அந்தஸ்தையும் ரத்து செய்தது. இதன் மூலம் சுப்ரமணிய சாமியின் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக அரசுக்கு புல்வாமா தாக்குதல் தேவைப்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.